மதுரை மாநகரில் உள்ள மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்(51) – விஜயலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர். வேல்முருகன் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். இவரின் இளைய மகளான கலையரசி மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கலையரசி சிறிதளவு உடல்பருமனாக இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் அவ்வப்போது தனது பெற்றோரிடம் உடல் பருமனை குறைக்க வேண்டும் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பெற்றோரும் உடல்பருமன் தானாகவே குறைந்துவிடும் என கூறி வந்தனர்.
இதனிடையே, கலையரசி கடந்த வாரம் ‘இணைவோம் இயற்கையுடன்’ என்ற யூடியூப் பக்கத்தில், ‘உடல் எடை குறையாதவர்களுக்கு Fat கரைய வைத்து உடலை மெலிவிக்கும் வெங்காரம்’ என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த வீடியோ பதிவை பார்த்துள்ளார். இதையடுத்து கடந்த 16ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) மதுரை கீழமாசி வீதியில் தேர்முட்டி அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் வெங்காரம் என்ற நாட்டு மருந்தை வீட்டிற்கு வாங்கி வந்துள்ளார்.
இதையடுத்து, மறுநாள் காலையில் அவர் யூடியூப்பில் கூறியதுபோல வெங்காரத்தை சாப்பிட்டுள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, கலையரசியை அவரது தாயார் விஜயலெட்சுமி மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்றார்.
பின்னர், சிகிச்சை முடிந்து மாலையில் வீடு திரும்பிய நிலையில் கலையரசிக்கு மீண்டும் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதனால், அவரது பெற்றோர் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும், வயிற்றுபோக்கில் ரத்தம் வெளியேறிவருவதாகவும் கூறி தனது தந்தையை கட்டிபிடித்து அழுதுள்ளார்.
இதற்கிடையே, இரவு 11 மணியளவில் கலையரசிக்கு அதிகளவில் வாந்தி, அதீத வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதனால், அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கலையரசியை அழைத்து சென்றனர். அங்கு, கலையரசியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி வரும்வழியிலயே உயிரிழந்தாக கூறியதால், பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து, கலையரசியின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம், கலையரசியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







