தமிழ் நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மாநிலத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக மற்றும் தவெக என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. முந்தைய தேர்தலை போல அல்லாமல் தேமுதிக உள்ளிட்ட புதுகட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் ஏற்கனவே உள்ள கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை குறிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக அளித்த இடங்கள் கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு ஏற்புடையதாக இல்லை என்றும் இதனால் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவலகள் வெளியாகின.
இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, ”திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது” என்றும் ”தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தொகுதிகள் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் இல்லை. பேச்சுவார்த்தைக்கு பிறகு முழுமையான தகவல்களை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.







