ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் ஒன்றில் நாட்டின் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ மற்றும் அவரது குடும்பம் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களுடனான பதிவு ஒன்று எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது. இதனால் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் டேரண்டினோவின் மரணம் தொடர்பான செய்தி போலியானது என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள குவெண்டின் டேரண்டினோவின் நெருங்கிய நண்பர் ஒருவர் டேரண்டினோ மற்றும் அவரது குடும்பம் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவக்கப்பட்டவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் குவெண்டின் டேரண்டினோ. இவர் இயக்கத்தில் வெளியான ‘கில் பில்’, ‘ரிசர்வாயர் டாக்ஸ்’, ‘இங்க்லூரியஸ் பாஸ்டர்ட்ஸ்’, ‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘ஜாங்கோ அன்செயின்ட்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களாலும் திரைத்துறையினராலும் கல்ட் கிளாக்காக மதிக்கப்படுகின்றன. மேலும் இரண்டு அகாடமி விருதுகள், இரண்டு பாஃப்டா விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் குளோப் கோப்பைகளையும் டொரண்டீனோ வென்றுள்ளார்.
குவெண்டின் டேரண்டினோ, இஸ்ரேலிய பாடகி டேனியலா பிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டு மணந்தார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மேலும் டேரண்டினோ குடும்பம் 2020 க்குப் பிறகு, டெல் அவிவ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இரண்டிலும் நேரத்தை செலவிட்டு வருகிறது.







