தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம்; உரிய நீதியை பெற்று தர நாதக துணை நிற்கும் – சீமான் உறுதி….!

தென்காசி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன் என்பவர் கடந்த 7 ஆம் தேதி அப்பகுதியின் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவால் சுடப்பட்டார். பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வது தொடர்பான வாக்குவாதத்தால் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நேற்று ஆலங்குளத்தில் நடைபெற்ற நாதக பிரசார கூட்டத்திற்கு நேரில் வந்த மணிகண்டனின் பெற்றோர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது ;

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவால் சிறிதும் மனிதத்தன்மையற்று துப்பாக்கியால் சுடப்பட்ட தம்பி மணிகண்டனின் உடல்நிலை கண்டு பெருந்துயருற்றுள்ள தம்பியின் பெற்றோர் ஆலங்குளத்தில் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்து தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.

சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’ இறக்கும் உரிமையை மீட்கவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், தம்பி மணிகண்டனுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தரவும் இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்து ஆறுதல் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.