தெலங்கானா மாநிலத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 992 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திலும் கொரோனா அதிகரித்து வருகிறார். இதைக் கட்டுப்படுத்த, தெலங்கானா அரசும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. அங்கு நாளை முதல் 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணிவரை அனைத்து கடைகளும் இயங்கும் என்றும் மற்ற நேரங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







