டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை, இடுகாட்டில் எரிக்கும் காட்சியைச் சித்தரிக்கும் புகைப்படம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,27,827 ஆக உள்ளது. தினமும் மகாராஷ்டிராவில் 60,000 பேருக்கு மேலாக புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்தபடியாக கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நிலவரப்படி 23,686 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 240 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இன்றைய நிலவரப்படி டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,30,179 ஆக உள்ளது. மேலும் இதுவரை 12,887 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவின் அதிகரிப்பால் டெல்லி திணறி வருகிறது என்றே கூறலாம். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவப்படுக்கைகள் தட்டுப்பாடு என்று டெல்லியின் சுகாதார கட்டமைப்பே சிதைந்துள்ளது. ’பிச்சை எடுங்கள், திருடுங்கள், ஆனால் மக்கள் உயிரைக் காத்திடுங்கள்’ என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தே டெல்லியின் எதார்த்த சூழ்நிலையை வெளிக்காட்டி உள்ளது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், ஒட்டுமொத்தமாக இடுகாட்டில் எரியூட்டும் காட்சியைத் தனியார் செய்தி நிறுவனம் புகைப்படமாகப் பதிவு செய்துள்ளது.







