டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ‘சமவேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கீழ்ப்பாக்கம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெரினா பேகம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். அப்போது காவல் வாகனத்தில் ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட நான்கு திசையிலும் பிரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.