தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு நேற்று மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக மாநிலம் முழுவதும், தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இதனையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. எனவே நேற்று டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.







