தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்வில் நடந்த சம்பவங்கள் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் , முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் இடம் பெறும் புகைப்படம் தலைமை செயலகத்தின் வாசல் 6ல் வைக்கப்பட்டது.
வரலாற்றில் ஆளும் கட்சியினர் புகைப்படங்கள் மட்டுமே இதுவரை தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த மறைந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்தபோது இதுபோன்ற பதவியேற்பு விழாக்களில் எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்படும். ஆனால் அது ஒரு சம்பிரதாய அழைப்பாக மட்டுமே இருக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் கலந்துகொண்டபோது அவருக்கு கடைசி இருக்கையே ஒதுக்கப்பட்டது என்பதெல்லாம் வரலாறு . ஆனால் இந்த முறை ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டபோது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோருடன் அவர் இயல்பாக அமர்ந்து தேனீர் அருந்தினார் என்பது குறிப்பிடதக்கது. அதற்கு அந்த புகைப்படங்களே சிறந்த சான்று.இத்தகைய ஆரோக்கியமான அரசியல் நகர்வு தமிழகத்தின் இன்றைய தேவையாக உள்ள சூழலில் இப்படங்கள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பதை நல்ல அரசியல் தொடக்கமாக அரசியல் நோக்காளர்கள் கருதுகின்றனர்.