ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து, தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சென்னையில் நாட்கணக்கில், ரெம்டெசிவர் மருந்திற்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை காணப்பட்டது. மேலும், சென்னையில் ரெம்டெசிவர் மருந்துக்காக, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான செய்தி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில், பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. இதன் எதிரொலியாக, இன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதில், ரெம்டெசிவர் மருந்திற்காக, மணிக்கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் நிலையை போக்க, நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ரெம்டெசிவரை தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, வரும் 18 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். அதைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், விற்பனை மையங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







