நாட்டில் தரமான கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, நான் அதிகமான உற்சாகத்தை பெறுவது உண்டு. கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளின் உற்சாகம், புன்னகைக்கு இணையானது எதுவுமில்லை.
இதையும் படியுங்கள் : அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்து வந்த பாதை
அரசியல் ஈடுபாட்டின் காரணமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயர்கல்வி பயிலவில்லை. நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் அவர். அந்த காலத்தில் பள்ளிகள் மிகமிகக் குறைவு. கல்வி கற்பதற்கான ஆர்வமும் குறைவு. பழமைவாத கருத்துகளை சமூகத்தில் விதைக்க சிலர் நினைக்கிறார்கள். பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. தரமான கல்வியை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடத்தை பெறுவோம். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். பள்ளியோடு நிறுத்தாமல் கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.







