அதிமுகவில் கடந்த 10 மாதங்களாக முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே தொடர்ந்து வரும் உட்கட்சி விவகாரத்தை தீர்வை நோக்கி நகர்த்துவதில் நீதிமன்ற வழக்குகள் மற்றும் உத்தரவுகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ள இந்த நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் நடத்திய சட்டப்போராட்டங்கள் குறித்த தகவல்களை காலவாரியாக திரும்பிப் பார்ப்போம்.
ஜூன் 22, 2022- பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே இருந்த நிலையில், பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஜூன் 23ந்தேதி நடைபெறவிருந்த பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜூன் 23, 2022- ஜூன் 23ந்தேதி பொதுக்குழு நடத்த அனுமதி அளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் அணி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. நீதிபதியின் வீட்டில் நள்ளிரவு தொடங்கி நடைபெற்ற இந்த விசாரணையில் அதிகாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி மறுக்கும் வகையில் தீர்ப்பு அமைந்திருந்தது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட 23 தீர்மானங்களை நிறைவேற்றலாம், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். இந்த தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளித்ததையடுத்து அவர்கள் பட்டாசு வெடித்து தீர்ப்பைக் கொண்டாடினர்.
ஜூலை 7, 2022- அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடையில்லை என்று உத்தரவிட்டது. கட்சி விதிப்படி கூட்டத்தை கூட்டலாம் என்றும் அனுமதி அளித்தது. அதே நேரம் இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடுவதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் கூறினர்.
ஜூலை 08, 2022- ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு 11ந்தேதி காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார். 11ந்தேதி காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் தரப்பினர் ஏற்பாடுகளை செய்துவந்த நிலையில், அந்த பொதுக்குழு நடைபெறுமா என்பது காலை 9 மணிக்குதான் உறுதியாகும் என்ற சூழல் அதிமுகவினிரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 2 நாட்கள் அக்கட்சியினருக்கு திக் திக் நிமிடங்களாக நகர்ந்தன.
ஜூலை 11, 2022- அதிமுக பொதுக்குழு நடத்த தடைவிதிக்க ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் தரப்பினருக்கு அனுமதி அளித்தார். 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஒப்புதலுடன் ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஜூன் 23ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனை 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது தீர்ப்பில் கூறினார்.
ஜூலை 20, 2022- அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி தங்கள் வசமே அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதிமுக அலுவலக சீலை அகற்றி இபிஎஸ் வசம் அக்கட்சியின் அலுவலக சாவியை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்கு தொண்டர்கள் அதிமுக அலுவலகம் வரவும் தடை விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 5, 2022- ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில், நீதிபதியை மாற்றக்கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் ஓபிஎஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கேவிடுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 17, 2022- அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூம் அடைந்த பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்தது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு அளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன்23ந்தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என தனது தீர்ப்பில் கூறினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்பதை உறுதிப்படுத்திய இந்த தீர்ப்பை அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
செப்டம்பர் 2, 2022- ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
செப்டம்பர் 30, 2022- ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடைவிதித்தது.
ஜனவரி 11,2023- ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு
ஜனவரி 30, 2023- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் தமது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி இபிஎஸ் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்குமாறு அவரது சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு
பிப்ரவரி 2, 2023- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளரின் வேட்பு மனுவை ஏற்பது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்வார் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் பதில்மனு தாக்கல்
பிப்ரவரி 3, 2023- எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இடைக்கால ஏற்பாடு ஒன்றை செய்தது. ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுத்து அதனை தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரம் இந்த உத்தரவு இடைக்கால ஏற்பாடு மட்டுமே என்றும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பில் இந்த உத்தரவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்
பிப்ரவரி 22, 2023- ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக் குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பிப்ரவரி 23ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.