மோடி அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கி குமரியில் தொடங்கி சென்னை வரை மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல பாஜக இளைஞரணியினர் முடிவு செய்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கடைசி நேரத்தில் தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, பாஜக இளைஞரணியினர் மோடியின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்குவதற்காக இன்று கன்னியாகுமரியில் தொடங்கி வரும் 12ஆம் தேதி சென்னைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் யாத்திரை செல்லும் பகுதியில் தேவையற்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கட்டிகொடுக்கப்பட்ட வீடுகளின் பயானிகளுடன் போட்டோ எடுத்துள்ளோம். அதேபோல், சுசிந்திரம் ரிங் ரோடு, பார்வதிபுரம் மெயின்ரோடு போன்றவை மத்திய அரசின் உதவியோடு போடப்பட்ட சாலைகளாகும். இதுபோன்று மாநிலம் முழுவதும் மத்திய அரசின் உதவியோடு நடைபெற்றுள்ள திட்டங்கள் யாரால் மக்களுக்கு கிடைத்தன என்ற தகவல் மக்களை முழுமையாக சென்றடையவில்லை. அதனை கொண்டு செல்லவே மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டோம். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி எங்கள் பேரணிக்கு தடை விதித்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என்றனர்.
பின்னர் கன்னியாகுமரியில் உள்ள காந்தி சிலை மற்றும் பாரத மாதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு, மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதால் 5 கார்களில் பாஜகவினர் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
இராமானுஜம்.கி








