குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு!

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக 61,84,566 மாணவர்களுக்கு கேக்குகள் (Cake) வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக 13 நவம்பர் 2026 அன்று. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 61,84,566 மாணவர்களுக்கு கேக்குகள் (Cake) வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கியும் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கேக்குகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதனடிப்படையில் நான்கு பெருநிறுவனங்கள் வாயிலாக கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி. மயிலாடுதுறை, சேலம், தஞ்சாவூர், மதுரை. திருவண்ணாமலை. கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு தலா இரண்டு பாக்கெட்டுகள் வீதம் மொத்தம் 45 கிராம் எடையுள்ள கேக்குகள் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் ஒரு மாணவருக்கு 45 கிராம் எடையுள்ள ஒரு கேக் பாக்கெட் வழங்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் (TNCSC) ஒருங்கிணைந்து உணவுப் பாதுகாப்பு துறையால் கேக்குகளின் தரம் சரிபார்க்கப்பட்ட பின்னர் பள்ளிகளுக்கு 10.11.2026 முதல் 12.11.2026 தேதிக்குள் கிடைக்கத்தக்க வகையில் கேக்குகளை விநியோகித்து வருகின்றனர். பள்ளிகளில் பெறப்பட்ட கேக்குகள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு 13.11.2026 அன்று மாணவர்கள் அனைவருக்கும் கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கியும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் கேக்குகள் வழங்குவதை கண்காணிப்பார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் 13.11.2026 அன்று குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிப்பார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.