சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில்
ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் தாளவாடி அடுத்த சேஷன்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் 2 மாடுகள் வளர்த்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டின் முன் கட்டியிருந்த 1 பசுமாட்டை காணவில்லை. மற்றொரு பசுமாடு ஏதோ ஒரு விலங்கு கடித்து படுகாயத்துடன் இருந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு விவசாயி சிவராஜ் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் படுகாயம் அடைந்த பசு மாட்டினை ஆய்வு செய்தனர்.
இதனையும் படியுங்கள்: காங்கிரஸ் வரலாற்றை சுட்டிக்காட்டி உத்தவ் தாக்ரேவுக்கு சரத்பவார் கூறிய ஆறுதல்
பின்னார் காணாமல் போன பசுமாட்டை வனத்துறையினர் மற்றும் விவசாயிகள்
தேடினார்கள். சேஷன் நகர் அருகே மானாவாரி நிலத்தில் காணாமல் போன பசுமாடு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இறந்த மாட்டினை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதே போல் அப்பகுதியில் பதிவான கால் தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி பசுமாட்டை கடித்து கொன்றதும், மற்றொரு பசு மாட்டை கடித்து படுகாயப்படுத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது.
அதே போல் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன விவசாயி கெய்சர் என்வரின்
பசுமாட்டின் எழும்பு கூடுகள் மட்டுமே அப்பகுதியில் கிடைத்தது. புலி பசு மாட்டை அடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். எனவே
புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்
கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட பகுதியில் சிசிடிவி
கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் ஒரு கேமராவில் புலி நடமாட்டம் இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்று தமிழகம் மட்டும் கர்நாடக
வனத்துறையினர் இணைந்து சேஷன்நகர் பகுதியில் உள்ள அடர்ந்த முட்புதர்களை
அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என தாளவாடி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
– யாழன்







