சின்னம் பறிபோனதை நினைத்து கவலைப்படாமல் தேர்தல் ஆணையம் அளித்த முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தவ் தாக்ரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா சிவசேனாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட உட்கட்சி பிரளயத்தில் உத்தவ் தாக்ரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக உதவியுடன் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவசேனா உட்கட்சி பிரச்சனை தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்று இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது உத்தரவை வழங்கியது. மெஜாரிட்டி அடிப்படையில் ஏக்நாத்ஷிண்டே பிரிவை உண்மையான சிவசேனாவாக அங்கீரித்த தேர்தல் ஆணையம், அந்த பிரிவுக்கு கட்சி சின்னத்தையும் பெயரையும் வழங்கியது.
இது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்ரே தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளதுடன். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேர்தல் ஆணையம் ஒரு முடிவை அறிவித்த பின்னர் அது குறித்து விவாதித்துக்கொண்டிருக்காமல் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தவ்தாக்ரேவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கட்சிக்கு புதிய சின்னத்தை தேர்ந்தெடுக்குமாறு யோசனை கூறியுள்ள சரத்பவார், அந்த சின்னத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இதுபோன்ற பிரச்சனையை சந்தித்தபோது காங்கிரஸ் கட்சியின் இரட்டை காளை சின்னத்தை இழக்க நேரிட்டதையும், பின்னர் கை சின்னத்தை அவர் தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் அதனை பிரபலமாக்கியதையும் சுட்டிக்காட்டி உத்தவ் தாக்ரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆறுதல் கூறியுள்ளார்.