“ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த எம்எல்ஏ மீது நடவடிக்கை!” – அன்புமணி வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்பி, தகாத முறையில் அணுகியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கைது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆட்சியர் புகார் – எம்.எல்.ஏ மீது சட்டப்படி நடவடிக்கை?

“கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மை தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of making inappropriate advances and sending unwarranted messages) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் புகார் மூலம் இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்த இந்த சிக்கல் தொடர்பாக தெளிவு பிறந்துள்ளது.

மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் செல்பேசி மூலம் தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவில் முகாம் அலுவலகத்திற்கு சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிகழ்வு சுமார் இரு மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதும் இதே நிலைப்பாட்டையே தமிழக அரசு மேற்கொண்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேற்று புகார் அளித்ததாக தி இந்து நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பதை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை!

வழக்கை விசாரித்த நீதியரசரும், இந்த வழக்கில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? உள் விசாரணைக் குழு எப்போது அமைக்கப் போகிறீர்கள்? என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பியதுடன், இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால், இனியும் கால தாமதம் செய்யாமல் மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மீது கைது உள்ளிட்ட சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.