திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதித்துறை உத்தரவுக்கு அஞ்சாமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய நாள் இன்று. தமிழக அரசு இந்த உத்தரவை நிறைவேற்றுமா அல்லது நிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மாவட்ட ஆட்சியர்கள் நீதிபதிகளைப் போல செயல்பட முடியாது!

“உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர். ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.

மாநில அரசுக்கே உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம்!

உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.