6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக), சிரோமணி அகாலி தளமும் (எஸ்ஏடி) மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அறிவிப்பை இரு கட்சிகளும் நவம்பர் 24 – செவ்வாய்க்கிழமை வெளியிட்டன. டெல்லியில் நடைபெற்ற கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமித் ஷா, இந்தக் கூட்டணியில் ‘படா பாய்’ (மூத்த சகோதரர்) யார் என்பதை அடிப்படையாகக் கொண்டே முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “படா பாய் முதல்வராகிறார். யார் மூத்த சகோதரரோ அவரே முதல்வராகிறார். இயல்பாகவே சிரோமணி அகாலி தளம் மூத்த சகோதரர் என்ற பொறுப்பை ஏற்கும்” என்று தெரிவித்தார்.
இந்து – சீக்கிய ஒற்றுமையின் அடையாளம்!
பாஜக – அகாலி தளம் கூட்டணியை இந்து – சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளம் என்று அமித் ஷா வர்ணித்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) மிகப் பழமையான கூட்டணிக் கட்சி மீண்டும் தங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அகாலி தளம் இனிமேல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கீகரிக்கப்பட்ட கூட்டணிக் கட்சியாக அரசியல் பணிகளை மேற்கொள்ளும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், பஞ்சாப் மாநிலத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்றார். அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல், இந்தக் கூட்டணி வெறும் அரசியல் ஏற்பாடு மட்டுமல்ல; இது ஓர் உணர்வுப்பூர்வமான பிணைப்பு என்று குறிப்பிட்டார்.

தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெறும் போதைப்பொருள் தடுப்பு!
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இரு கட்சிகளும் விரைவில் தயாரிக்க உள்ளதாக அமித் ஷா தெரிவித்தார். பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது மற்றும் இந்து – சீக்கிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை கூட்டணியின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
2020-ல் முறிந்த கூட்டணி மீண்டும் இணைந்தது!
பாஜகவும் அகாலி தளமும் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூட்டணியை முறித்துக் கொண்டன. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. மேலும், அகாலி தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சரவையில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அந்த மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. மொத்தம் 117 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில் அகாலி தளம் 3 இடங்களையும், பாஜக 2 இடங்களையும் கைப்பற்றின.
1996-ல் தொடங்கிய நட்பு!
பாஜகவின் மிகப் பழமையான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக அகாலி தளம் திகழ்கிறது. கடந்த 1996ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பிறகு, அகாலி தளத்தின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் நட்பு தொடங்கியது. இதையடுத்து, 1997ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியை அறிவித்தன.
தொடர்ந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவும் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், கூட்டணி நிபந்தனைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில், தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.




