மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  டெல்லி மாநிலத்தில் மதுபானக் கொள்கையை வகுத்ததிலும்,  செயல்படுத்தியதிலும் பல்வேறு…

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி மாநிலத்தில் மதுபானக் கொள்கையை வகுத்ததிலும்,  செயல்படுத்தியதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது.  டெல்லி திஹார் சிறையில் இருந்த அவரை மார்ச் 10-ம் தேதி காவலில் எடுத்த அமலாக்கத்துறை 12 நாள் விசாரித்தது. இதை அடுத்து அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே மணீஷ் சிசோடியா, ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் இன்றைய விசாரணையில், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மணிஷ் சிசோடியா மீதான வழக்கை 8 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க சிபிஐ, அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இத்துடன் விசாரணை காலதாமதமானால் சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.

முந்தைய விசாரணையில், ‘மணீஷ் சிசோடியாவை காலவரையின்றி காவலில் வைத்திருக்க முடியாது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், குற்றச்சாட்டு மீதான வாதங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்’ என்று சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.