ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொடுமை!

மயிலாடுதுறையில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், பூச்சி மருந்தை குடித்த சிறுவன், கவலைக்கிடமான நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (14).…

மயிலாடுதுறையில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், பூச்சி மருந்தை குடித்த சிறுவன், கவலைக்கிடமான நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (14). இவரது தந்தை ஜெயராமன் கூலித் தொழில் செய்து வரும் நிலையில், பள்ளி படித்து வரும் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்த சசிகுமாரை அவரது அக்கா பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என கண்டித்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த சசிகுமார் வீட்டில் இருந்த ஏறும்பு மருந்தை குடித்துள்ளார். பின்பு தலை சுற்றி வயிற்று வலியால் அவதிப்பட்ட சசிகுமாரை அவரது பெற்றோர் உடனடியாக பொறையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் சசிகுமாருக்கு செவிலியர்கள் முதலுதவி செய்த நிலையில் பின்பு அருகிலுள்ள திருக்கடையூர் , ஆக்கூரிலும் மருத்துவர்கள் இல்லை என கூறியுள்ளனர்.

தொடர்ந்து சசிகுமார் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சசிகுமாரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவிக்கு தொடர்பு கொண்டபோது அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழியில் ஆம்புலன்ஸ் இருப்பதாகவும் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என தெரிவித்ததால். சசிகுமாரை உயிருக்கு போராடிய நிலையில் இருசக்கர வாகனத்தில் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவை உள்ளதாகவும் தரங்கம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.