தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த 2 செவிலியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது இதே போன்று உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் 41 வயதான இந்திரா. இவர், சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இருதவியல் துறையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 52 வயதுடைய பிரேமா என்பவர் வேலூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் செவிலியராக பணியாற்றிவந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவர்கள், செவிலியர்களிடையே பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த இரண்டு செவிலியர்களின் குடும்பத்தாருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என செவிலியர்கள் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.