’பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும்’ – பி.டி.உஷா உடனான சந்திப்புக்குப் பின் மல்யுத்த வீரர்கள் பேட்டி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு தண்டனை கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு தண்டனை கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை, இன்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், முன்னாள் தடகள வீராங்கனையுமான பி.டி.உஷா நேரில் சந்தித்தார். தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகவும், நீதி கிடைக்க உதவுவதாகவும் பி.டி.உஷா கூறியதாக மல்யுத்த வீரர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

அண்மையில், ”மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒழுக்கமின்மைக்குச் சமம்” என்று பி.டி.உஷா கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், இன்று அவர் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.