டெல்லி அரசியலை உலுக்கி வரும் மதுபான கொள்கை வழக்கு போலியானது என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்ட மதுபான கொள்கையில் மிகப் பெரிய ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆம் ஆத்மியின் எம்பியான சஞ்சய் சிங்கின் பெயரையும் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை சேர்த்திருந்தது.
ஆனால், எம்பி சஞ்சய் சிங்கின் பெயர் தவறுதலாக இடம் பெற்றுவிட்டதாக அமலாக்கத்துறை அண்மையில் அறிவித்ததோடு, இது தொடர்பாக அவருக்கு வருத்தம் தெரிவித்து கடிதமும் எழுதியிருந்தது.
இந்த நிலையில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்வீட்டர் பதிவில், தவறுதலாக குற்றப்பத்திரிகையில் சஞ்சய் சிங்கின் பெயர் இடம் பெற்றதால் மொத்த வழக்கும் போலியானது என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
குற்றப்பத்திரிகையில் சஞ்சய் சிங்கின் பெயர் கவனக்குறைவாக தட்டச்சு செய்யப்பட்டது என்றும் இந்த தவறை சரி செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் நேர்மையாக உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவும், மோசமான அரசியல் சூழலில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியை சீர்குலைக்கவும் பிரதமர் இப்படி செய்கிறார் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
இதனிடையே, சஞ்சய் சிங்கிற்கு எதிராக தெரிந்தே பொய்யான, அவதூறான மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அறிக்கைகளை வழங்கிய அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா மற்றும் உதவி இயக்குநர் ஜோகேந்தர் சிங் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மத்திய நிதி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.








