தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராய குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. முந்தைய விசாரணையின்போது, தன்பாலினத்தவர்கள் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய உரிமைகள் வழங்கலாமா? என்பது தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
குறிப்பாக ஓரின சேர்க்கையாளர்கள் இணைந்து கூட்டு வங்கி கணக்குகளை தொடங்க அனுமதி வழங்குவது, ஆயுள் காப்பிட்டு கொள்கைகளில் வாழ்க்கை துணையை இணைப்பது உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளில் அனுமதி வழங்கலாமா? என்பது தொடர்பாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்களை உள்ளடக்கியது. எனவே மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளதாகவும், வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களும் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான விஷயங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறினார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் அதனை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







