“போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தவெக நிர்வாகிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், ரவுடியிசம், மாமூல் பிரச்சினைகள் என ஒரு பெரிய சட்டவிரோத வலையமைப்பே தவெகவிற்குள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால், கட்சித் தலைமை அதை கவனிக்க மறுப்பது கண்டனத்திற்குரியது.

ஒரு பிரச்சினை நடந்த பிறகு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதும், கைது செய்வதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்பதை ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தனது கட்சிக்குள் “நிர்வாகிகள்” என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.