சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார் முதல்வர் விஜய்!

முதலமைச்சர் விஜய் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக விஜயவாடா சென்றார். இதற்காக சென்னை நீலாங்கரையில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார். தொடர்ந்து விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் முதலமைச்சர் விஜய் விஜயவாடா சென்று, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் விஜய்க்கு மலர்க்கொத்து கொடுத்து சந்திரபாபு நாயுடு வரவேற்றார். இருவரும் இரு மாநில நதிநீர் பங்கீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு-ஆந்திரா இடையிலான நீர் பங்கீடு, நதிகள் இணைப்பு குறித்தும் கிருஷ்ணா நீர் பங்கீடு, கோதாவரி-காவிரி இணைப்பு குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அப்போது தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.