தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற கூடுதல் விலைக்கு தவெக அரசு கொள்முதல் செய்யப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் மின் தேவையானது சுமார் 21,000 யூனிட்டுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மின் உற்பத்தியும் பெருமளவில் குறைந்துள்ளது. அப்படியிருக்கையில், ஒவ்வொரு மாதத்தின் மின்தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
சரியான திட்டமிடலுடன், தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், முதலமைச்சர் விஜய் “முருங்கைக்காய்” பறிப்பதிலும், “டிராக்டர்” ஓட்டுவதிலும், ரீல்ஸ் போடுவதிலும் கவனம் செலுத்திக் கொண்டு, மக்களின் அடிப்படை தேவையை அலட்சியப்படுத்தியதன் விளைவு தான், இன்று யூனிட்டுக்கு ரூ.35 வரை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
மாநிலத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க, ஆந்திரா அரசு யூனிட்டுக்கு ரூ.16 – ரூ.20 வரை மட்டுமே செலவிடும் நிலையில், தனது அலட்சியத்தால் தமிழக மின்வாரியத்தின் மீது பெரும் கடனை இழுத்துவிட்டுள்ள தவெக அரசு, எந்த மாநிலத்தையும் ஆளத் தகுதியற்றது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




