மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து பணம் திருட்டு; இருவர் கைது

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து லட்சக்கணக்கில் அபராதம் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோவில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி…

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து லட்சக்கணக்கில் அபராதம் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோவில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த இரண்டு நபர்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து சுகாதாரத் துறை பிரிவில் பணி புரியும் அதிகாரிகள் என தங்களை தெரிவித்துக் கொண்டு சோதனை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

கடையில் தமிழக அரசு தடை விதித்துள்ளதை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு உள்ளதாக குற்றம் சாட்டிய இருவரும் அதற்கான அபராதமாக முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், அபராத தொகைக்கான ரசீது எதுவும் அவர்களிடம் கையில் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த வியாபாரி மிட்டல் லால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க எஸ் பிளனேடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. இருவரும் மாநகராட்சியில் பணிபுரியவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் மாநகராட்சி சுகாதார துறையில் சாந்தகுமாரி என்ற பெண் தலைவராக உள்ளது போல், ஒரு விசிட்டிங் கார்டை தயார் செய்து அதை வைத்து வணிக நிறுவனங்களில் காண்பித்து சோதனை நடத்துவது போல் நடித்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்காக அபராதம் விதிப்பதாக பணம் வசூல் செய்தது தெரியவந்தது.

இந்த இருவரும் பாரிமுனை, மண்ணடி, கொத்தவால் சாவடி, சவுகார்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள எஸ்பிளனேடு போலீசார் விசிட்டிங் கார்டில் குறிப்பிடப்பட்ட சாந்தகுமாரி என்ற பெயரில் யாரும் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.