‘உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம்’ – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்

செருப்பை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார். மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக – பாஜகவுக்கு இடையே…

செருப்பை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக – பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரை பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் நிதியமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து விமானநிலையத்தில் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார். பின்னர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இராணுவ வீரரின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தச் சென்று இருந்தோம், என்ன தகுதி அடிப்படையில் அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என நிதியமைச்சர் கேட்டார். இதனையடுத்து விமான நிலையத்தில் விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டது. விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அரசின் சார்பில் மரியாதை செலுத்தியபின்னர் மற்றவர்கள் விமானநிலையத்திற்கு வெளியே அல்லது ராணுவ வீரரின் வீட்டில் மரியாதை செலுத்தலாம் என அமைச்சர் பிடிஆர் கூறினார்.

அதன்பின்னர் இராணுவ வீரரின் உடல் அரசு விதிமுறைகள் படி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அமைச்சரின் கருத்தை நான் தனி மனித தாக்குதலாக எடுத்துக் கொண்டேன். நான் பாரம்பரியமாகத் திராவிட குடும்பத்திலிருந்து வந்தவன். ஓராண்டு முன் பாஜகவில் சேர்ந்தேன், பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர், அதையும் பொறுத்துக் கொண்டு நான் பாஜகவில் பயணித்தேன். இது ஒரு புறமிருக்க அமைச்சர் கார் மீதான தாக்குதல் எனக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. எனக்குத் தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவு நிதியமைச்சரைச் சந்தித்தேன். அவரிடம் மதுரை விமானநிலையத்தில் நடைபெற்ற விரும்பத் தகாத காரணத்திற்காக மன்னிப்புகோரினேன்.

பாஜக தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. நிதியமைச்சர் இந்நிகழ்வைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற துவேசமான அரசியலைச் செய்ய நான் ஒரு ஆளாக இருக்கக் கூடாது என நினைத்தேன். அமைச்சரைச் சந்தித்து மன்னிப்பு கேட்டதால் மனது இலகுவாக மாறி உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் அமைச்சரைச் சந்தித்தேன், பாஜகவின் பதவியை விட மன அமைதி மிக முக்கியமானது. பாஜகவில் உறுதியாக நான் தொடர மாட்டேன். பாஜகவின் மத, வெறுப்பு அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை. காலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்க உள்ளேன். திமுக என்னுடைய தாய் வீடு, திமுகவில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை, திமுகவில் சேர்ந்தாலும் தவறில்லை, டாக்டர் தொழிலைப் பார்க்கப் போகிறேன் எனக் கூறி இருந்தார்.

அண்மைச் செய்தி: ‘‘பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிய மாநில தலைவர்; நன்றி தெரிவித்த டாக்டர் சரவணன்’

இந்நிலையில், மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ட்வீட் செய்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுகிறேன். செருப்பைத் திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர்கள் உங்களுக்காக பாதுகாத்து வைத்துள்ளார்கள் உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.