கோலிவுட்டில் இந்த வாரம் ஹபீபி, டபுள் ஆக்குபன்சி, சாருகேசி, ஆட்டி, நிழல், வள்ளுவன், மூன்றாவது கண், வருகை பதிவேடு உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக…!
ஹபீபி
மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்துாரிராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், அனஸ்ரேயாராஜன், தனஸ்ரீ உட்பட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘ஹபீபி’. தமிழ்சினிமாவில் முதன்முறையாக முழுக்க, முழுக்க ஒரு இஸ்லாமிய குடும்ப பின்னணியில் உருவான படம் இது.

1980களில் நெல்லை மாவட்ட கிராமத்தில் கதை தொடங்கிறது. தறி நெசவு செய்யும் யூசுப் என்ற கஸ்துாரிராஜா குடும்பத்தில் பொருளாதாரரீதியாக பிரச்னைகள் வர, அவர் தம்பி சம்பாதிக்க ரியாத்துக்கு பயணம் செய்கிறார். இதனால் அந்த குடும்பம் ஓரளவு முன்னேறுகிறது. கஸ்துாரிராஜா மகனான ஈசாவும் காதல் தோல்வி, அவமானம் காரணமாக பாரீன் செய்கிறார். பல ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் வர, அவருக்கான திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்துக்கு பல பிரச்னைகள் வருகிறது. அதை மீறி திருமணம் நடந்ததா? ஈசாவின் முதல் காதல் என்னவானது என்ற ரீதியில் கதை நகர்கிறது.
1980களில் ஆரம்பிக்கும் கதை 2023ல் முடிகிறது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு குடும்ப கதையை உணர்வுபூர்மாக, இதுவரை யாரும் சொல்ல கோணத்தில், காண்பிக்காத கதை களத்தில் ஹபீபியாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மீராகதிரவன். குடும்பதலைவராக வரும் கஸ்துாரிராஜா தேர்ந்த நடிப்பை தந்து இருக்கிறார். குடும்ப பிரச்னைகளால் அவர் கலங்கும் இடங்களில், மகனுக்கு திருமணம் நடக்காமல் தடைபடும்போது சோகத்தில் தவிக்கிற இடங்களில் நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார். அவர் மகனாக வரும் ஈசா டீன்ஏஜ், இளைஞன் என இரண்டு மாறுபட்ட நடிப்பில் வருகிறார். ஹபீபி படத்தின் பெரும் பலம், அதில் பெண் கேரக்டர்களாக வருபவர்கள், அவர்கள் பின்னணி, நடிப்பு. சித்தியாக வரும் அனஸ்ரேயா ராஜனுக்கு பல விருதுகள் கொடுக்கலாம். சில இடங்களில் கண்கலங்க வைக்கிறார்.
ஹீரோ முதல் காதலியாக வரும் மாளவிகா நடிப்பு கியூட். மணப்பெண்ணாக வரும் தனஸ்ரீ நடிப்பில் புதுமைப்பெண் தெரிகிறார்.பாட்டி, அம்மா, டீச்சர், சகோதரிகள்,குடும்ப உறுப்பினர்கள், ஹீரோயின் அம்மா என ஒவ்வொரு கேரக்டரும் ஒரு கதை சொல்கிறது. இவர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதேபோல், சித்தப்பாக வருபவர், கஸ்துாரிராஜா இந்து நண்பன், ஹீரோ நண்பர்கள், ஊர் பெரியவர்கள், மணப்பெண் தந்தை சாகுல் என பலரும் இயல்பான நடிப்பால் படத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.
மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவும், சாம் சி எஸ் இசையும் படத்தை இன்னும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது. கப்பலுக்கு போன மச்சான் பாடல், நாகூர் அனிபா பாடல் இதம். இடைவேளைக்குபின் சற்றே தொய்வு வந்தாலும், கிளைமாக்ஸ் மிரட்டிவிடுகிறது. குடும்பத்துக்காக, பணத்துக்காக வெளிநாடு சென்றவர்கள் வாழ்க்கை, அவர்களின் குடும்ப நிலையை மிகவும் உணர்வுபூர்வமாக , அழுத்தமாக கதை விவரிக்கிறது. தமிழில் இஸ்லாமிய குடும்பம், அவர்கள் வாழ்க்கை முறை, உறவுகள், பிரச்னைகள், பெண்களின் நிலை, உணர்வுகள் குறித்து இப்படி எந்த படமும் வந்தது இல்லை. இந்த படத்தை மறக்க பல ஆண்டுகள். இந்த ஆண்டு தமிழில் வந்துள்ள தரமான படைப்பு
டபுள் ஆக்குபன்சி
காலையில் பெண்ணாக, இரவில் ஆணாக இருக்கும் ஒரு விசித்திர பிறவியின் காதல் கதை தான் ‘டபுள் ஆக்குபன்சி’. ஆம், காலையில் பெண்ணாக இருக்கிறார் ரேஷ்மா, அவரை வினோத்கிஷன் காதலிக்கிறார். இரவில் ஆணாக இருக்கும் அவரை (சந்தோசை) பணக்கார குடும்பத்தை சேர்ந்த சம்யுக்தா காதலிக்கிறார். இருவருமே தங்கள் ரகசியத்தை காதலன் அல்லது காதலியிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள், சண்டைக்கள், காதல் தோல்வி அடையும் சூழ்நிலை. ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வர இன்னும் சில பிரச்னைகள். இந்த பிரச்னைகள் என்ன தீர்வு கிடைத்தது என்பது அஸ்வின் கந்தசாமி இயக்க, குஷ்புவின் அவ்னிமூவிஸ் தயாரித்துள்ளது.

பேன்டசி காதல் கதையாக இருந்தாலும் கலகலப்பா, கலர்புல்லாக நகர்கிறது படம். இரண்டு ஜோடிகளின் லவ் சீன், பிரச்னைகள், சாங் அருமையாக இருக்கிறது. இவர்களுக்கு பாலமாக இருக்கும் விடிவி கணேஷ் தன் பங்கிற்கு கலகலப்பூட்டி, காமெடி செய்து இருக்கிறார். ஹோம்லியான ரோலில் ரேஷ்மாவும், சற்றே கவர்ச்சியான ரோலில் சம்யுக்தா ரசிக்க வைக்கிறார்கள்.
சந்தோஷ் நடிப்பு, குறும்புதனம் பிரஷ், வினோத் நடிப்பும் ஓகே. வில்லனாக வரும் பகவதிபெருமாள், விச்சு அவ்வப்போது வந்து மிரட்டுகிறார்கள். சாம். சி.எஸ் பாடல்கள் எனர்ஜியாக இருக்கிறது. சற்றே விவகாரமான கதை என்றாலும், ஆபாசம், விரசம் இல்லாமல் எடுத்து இருக்கிறார் இயக்குனர். காதல் தவிர சென்டிமென்ட் இருக்கிறது. அது கொஞ்சம் போராடிக்கிறது. கிளைமாக்சையும் ஜாலியாக, காமெடியாக நகர்த்தியிருக்கலாம். ஹீரோ, ஹீரோயின் பெயர் ரஜினி, கடைசியில் கமல் பெயரும் வருகிறது. குஷ்பு கவுரவ வேடத்தில் வருகிறார். மாறுபட்ட கதை விரும்புகிறவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்த கதை பிடிக்கும்.
சாருகேசி
சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி, தலைவாசல் விஜய், ராஜ் அய்யப்பா, ரம்யாபாண்டியன் நடித்த இசை குடும்பத்து கதை ‘சாருகேசி’. பெரிய சங்கீத மேதையான ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்க்கையில் குடும்ப பிரச்னைகள், சண்டைகள் மற்றும் ஞாபகமறதி நோயும் வருகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? இதனால், அவர் வாழ்க்கை எப்படி மாறியது என்பது கதை.

சங்கீத மேதையாக நடிப்பில் பின்னியிருக்கிறார் ஒய்.ஜி.மகே ந்திரன். 75வயதிலும் அவ்வளவு எனர்ஜியாக, ரசித்து நடித்து இருக்கிறார். குடும்ப பிரச்னைகள் காட்சிகளில், ஞாபகமறதியால் அவதிப்படும் இடங்களில், கிளைமாக்சில் அவர் நடிப்பை பாராட்டலாம். அவர் மனைவியாக வருகிற சுகாசினி, டிரைவராக வருகிற தலைவாசல் விஜய், டாக்டராக வருகிற ஜெயபிரகாஷ் ஆகியோரும் கேரக்டர் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.
மகன் ராஜ்அய்யப்பா, மருமகள் ரம்யாவுக்கு கொஞ்சம் வில்லத்தனமான ரோல். அவர்கள் வரும் இடங்களில் டோன் மாறுகிறது. ஞாபக மறதி சீன்கள், கிளைமாக்ஸ் ஆகியவை ஓகே. கடவுள் மாதிரியான ஒரு வேடத்தில் சத்யராஜ் வந்து பல விஷயங்களை பேசுகிறார். நாடகம் சினிமாவாக மாறியிருப்பதால் அந்த பாதிப்பு பல இடங்களில் இருக்கிறது.நிறைய கேரக்டர் ஓவராக அல்லது நாடகத்தன்மையுடன் நடித்து இருக்கிறார்கள். தேவா இசையும், பா. விஜய் வரிகளும் ஓகே. கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்களுக்கு, ஒய்.ஜி. மகேந்திரன் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும்
நிழல்
ஏ.கே.குமார் இயக்கத்தில் பிக்பாஸ் ஜனனி இரட்டை வேடத்தில் நடித்த சமூக அக்கறையுள்ள, பழிவாங்கும் கதையே ‘நிழல்’. ஒரு தொழிலதிபர் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொல்கிறார்கள். டாக்டரான ஜனனிக்கு இந்த விஷயம் தெரிய வர, அவர் எப்படி அவர்களை பழிவாங்குகிறார். அதனால், அவர் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது கதை.

டாக்டராக, இன்னொரு வேடத்தில் அழகான, அழுத்தமான நடிப்பை ஜனனி வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு கொடூரத்தைகண்டு அவர் பொங்குவது, அதற்கு பழிவாங்க ஆயுதத்தை எடுப்பது, சம்பந்தப்பட்ட வில்லன்களுக்கு வலிக்கிற அளவுக்கு தண்டனை கொடுப்பது படத்தின் பிளஸ். கிளைமாக்சில் அவர் கேரக்டர், திருப்புமுனை ஆகியவையும் டைரக்டர் டச். ஹீரோவாக வரும் விசாகனுக்கு ஆரம்பத்தில் அதிக வேலை இல்லை. ஆனால், கோர்ட் காட்சிகளில் கலக்குகிறார்.
வில்லனாக வரும் ஹரி, அவர் நண்பர்கள் கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நடித்து இருக்கிறார்கள். ஜனனி அப்பாவாக ரமேஷ்கண்ணாவும், வில்லன் அப்பாவாக சிவன்சீனிவாசனும் வருகிறார்கள். ஜனனிக்கு உதவுகிற டாக்டர், வில்லன் அம்மா கேரக்டரும் மனதில் நிற்கிறது. கொஞ்சம் சீரியசான கதை என்பதால் கமர்ஷியல் விஷயங்களுக்கு அதிகம் வேலை இல்லை. சில இடங்களில் போராடிக்கிறது. கிளைமாக்ஸ் மட்டும் ‘இதுசரியான தீர்வு’ என சொல்ல வைக்கிறது. பெண்களுக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபவர்கள், பணம், பவரால் ஆடுபவர்களுக்கு நிழல் ஒரு நல்ல பாடம்
ஆட்டி
ஒரு மலை பகுதியில் போலீஸ் ஸ்டேஷன், அங்கு இன்ஸ்பெக்டராக வரும் இசக்கி கார்வண்ணன், ஒரு வாத்தியர் கொலை பற்றி விசாரிக்கிறார். அந்த கொலையை செய்தவர் யார்? காரணம் என்ன? அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார் இன்ஸ்பெக்டர்? அந்த மலை பகுதியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதை சொல்லும் படம் ‘ஆட்டி’.

இப்படத்தை தி.கிட்டு இயக்கி இருக்கிறார். 1970களில் கதை நடக்கிறது. இந்த மலை பிரதேச கதையுடன் ஒரு ராஜா கதை, அப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள், அப்போது அங்கே எழுந்த புரட்சி, பெண்கள் எடுத்த முடிவு, அதற்கும் இப்போதைய சம்பவத்துக்கும் என்ன தொடர்பு என்ற திரைக்கதை ஓகே.
மலைவாழ் பெண்ணாக, ஒரு சமூக சேவகியாக அம்முஅபிராமி வருகிறார். அவர் கெட்அப், நடிப்பு புதுமை. ஆனால், அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். திடீரென காணாமல் போய்விடுகிறார். அல்லது கதையுடன் அவருக்கு முக்கிய தொடர்பு இல்லாமல் போகிறது. கதைநாயகனாக வரும் இசக்கி கார்வண்ணன் அந்த கொலையை, அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் இடங்கள் விறுவிறுப்பு. ஒரு பெண்கள் படை, அவர்களின் செயல், அந்த பெ ண்கள் யார்? அவர்கள் கெட்அப் ஆகியவை ஓரளவு ஓகே. ஆனால், பல கேள்விகளுக்கு விடை சொல்லாமல் இரண்டாம்பாகத்தில் பாருங்கள் என்று சொல்வது ஏமாற்றம். பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிராக செயல்படுவர்களுக்கு தண்டனை, பெண்களின் வீரம், தமிழ் குடியில் பெண்கள்தான் முதலானவர்கள் என்ற கருத்து மட்டும் ஓகே.
வள்ளுவன்
ஒரு அரசியல்வாதி, போலீஸ்காரர், வக்கீல் ஆகியோர் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அவர் உடலில் திருக்குறள் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த கொலையாளி இன்னொரு தொழிலதிபரை கொன்றே தீருவேன் என போலீசுக்கு சவால் விடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி பிரேம்.அவருக்கு உணவு டெலிவரி செய்யும் சேத்தன் சீனு மீது சந்தேகம் வருகிறது. ஆனால், ஆதாரம் கிடைக்கவில்லை. அந்த கொலைகளை செய்தது யார்? திருக்குறள் எழுத காரணம் என்ன? கொலையாளி பிடிபட்டாரா என்பது சங்கர்சாரதி இயக்கத்தில் உருவான ‘வள்ளுவன்’ கதை.

சேத்தன் சீனு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உணவு டெலிவரி பாய், தங்கை பாசம் கொண்ட அண்ணன், திருக்குறள் ஆர்வலரான தனது தங்கை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட, அவர் மாறும் விதம், போலீசி்ல் சிக்க அவஸ்தை அனுபவிக்கும் இடம் என பல இடங்களில் அவர் சிறப்பாக நடித்து இருக்கிறரா். அவர் காதலியாக வரும் ஆஸ்ஷாசவேரிக்கு நல்ல கேரக்டர். கிளைமாக்சில் ஒரு விஷயத்தை செய்து ஆச்சரியம் கொடுக்கிறார்.
கற்பழிப்பு, பணக்காரன், போலீஸ், வக்கீல், தண்டனையில் இருந்து தப்பிப்பது, பழிவாங்கல் ஆகியவை பல படங்களில் பார்த்தது. ஆனாலும், கொலை, திட்டம், திருக்குறள் பின்னணி, விசாரணை, கிளைமாக்ஸ் டுவிஸ்ட் ஆகியவை புதிதாக இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாலும் தண்டிப்பட வேண்டும் என்பது நல்ல கரு.
மூன்றாவது கண்
சகோகணேசன் இயக்கத்தில் கலையரசன், விதார்த் நடித்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் மூன்றாவது கண். ஒரு மூடப்பட்ட பேக்டரில் நான்குபேர் என்ட்ரி ஆகிறார்கள். அங்கே ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தது இந்த நால்வரில் ஒருவரா? வேறு நபரா என்பது இந்த படத்தின் கதை.

வருகைபதிவேடு
காதல், நட்பு, மற்றும் உணர்வுபூர்வமான குடும்பக் கதையை அழுத்தமாகப் பேசும் படம் வருகை பதிவேடு. பசங்க’ பாண்டி மற்றும் ‘வாழை’ ஜானகி நடிக்க, யாசர் அரபாத் இயக்கியுள்ளார்.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்




