4 நாட்கள் நாடாளுமன்றக் கூட்டம்!
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு நவம்பர் 26 – வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அத்தியாவசிய அரசு அலுவல்களை மேற்கொள்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் நடவடிக்கைகளைப் பொறுத்து இரு அவைகளின் கூட்டமும் டிசம்பர் 3-ம் தேதியுடன் நிறைவடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படுமா?
இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அரசியலமைப்புத் திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2029-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையாக இந்த மசோதாக்கள் கொண்டுவரப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிவிப்பு!
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இரு அவைகளையும் மீண்டும் கூட்டுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, மக்களவை நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2-ம் தேதியும் மீண்டும் கூடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அரசின் அத்தியாவசிய அலுவல்களை மேற்கொள்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகவும், அலுவல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப இரு அவைகளின் கூட்டமும் டிசம்பர் 3-ம் தேதி நிறைவடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புக் கூட்டத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், அந்தக் கூட்டத்தொடரை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கவில்லை. இதனால், சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்கெனவே நிலவி வந்தது. நாடாளுமன்ற விதிகளின்படி, சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




