40,830 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு நீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை!

125 நாட்களுக்கு வினாடிக்கு 630 கன அடிக்கு மிகாமல் நீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாயின் கீழுள்ள 27,324 ஏக்கர் நேரடி பாசன பரப்புகளுக்கும் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய்களின் கீழுள்ள 13,506 ஏக்கர் நேரடி பாசன பரப்புகளுக்கும் ஆகமொத்தம் 40,830 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்குத் தேவையான நீரை தற்போது நீர்த்தேக்கத்தின் இருப்பில் உள்ள நீர் மற்றும் பிசான பருவ காலத்தில் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து அடிப்படையிலும் 27.11.2026 முதல் 31.03.2027 வரை 125 நாட்களுக்கு வினாடிக்கு 630 கன அடிக்கு மிகாமல் நீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், தூத்துக்குடி உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 40,830 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.