தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அக்டோபர் 2026 மாதத்தில் கனமழை பெய்தது. ஆனால் நவம்பர் 2026 மாதத்தில் இதுவரை போதுமான மழை பெய்யவில்லை. மாறாக, அதிகாலை வேளைகளில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பனிபொழிய ஆரம்பித்துள்ளது. அவ்வப்போது நிலவுகின்ற வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு நிலவி வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பாதை!
அதன்படி, சுமார் 1.5 கி மீ உயரம் வரை குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
இதன் காரணமாக, தமிழ் நாட்டில் இன்று (நவம்பர் 27) தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




