அமெரிக்க குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் SpaceX பங்கு.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் SpaceX நிறுவனத்தின் ஒரு பங்கை வழங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஏற்கெனவே அறிவித்த பங்கு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட நன்கொடை திட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் ஒரு SpaceX பங்கு!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், அமெரிக்காவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் SpaceX நிறுவனத்தின் மேலும் ஒரு பங்கை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நவம்பர் 26-ம் தேதி வியாழக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் SpaceX நிறுவனத்தின் மற்றொரு பங்கை நன்கொடையாக வழங்குவேன் என தெரிவித்துள்ளார். கடந்த மாதம், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடுத்த ஆண்டு SpaceX நிறுவனத்தின் ஒரு பங்கை வழங்குவதாக மஸ்க் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தற்போது அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி ஆண்டுதோறும் பங்குகளை வழங்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 2 பங்குகள்.. எப்போது கிடைக்கும்?

இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் மொத்தம் இரண்டு பங்குகள் கிடைக்க உள்ளன. அதில் ஒரு பங்கை SpaceX நிறுவனம் வழங்குகிறது. மற்றொரு பங்கை எலான் மஸ்க் தனது சொந்தப் பங்குகளில் இருந்து வழங்க உள்ளார். இதற்கிடையே, தற்போது செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு Trump Account கணக்கிற்கும் SpaceX நிறுவனத்தின் Class A பொதுப் பங்கில் இருந்து ஒரு பங்கை வழங்குவதாக அந்நிறுவனம் நவம்பர் 25 – புதன்கிழமை அறிவித்துள்ளது. இதற்கு இணையாக, தானும் ஒரு பங்கை வழங்குவதாக மஸ்க் உறுதியளித்துள்ளார். இந்தப் பங்குகள் ஒரே நேரத்தில் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SpaceX நிறுவனம் தனது பங்கை அடுத்த மாதம் வழங்கத் திட்டமிட்டுள்ளது. மஸ்க் தனது தனிப்பட்ட பங்கை, 2027 ஜூன் மாதத்தில் அவருக்கான பங்குகளை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டுக் காலம் முடிவடைந்த பிறகு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

18 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம்!

SpaceX நிறுவனத்தின் நவம்பர் 25 – புதன்கிழமை இறுதி பங்கு விலையான 127.44 டாலரைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இந்த இரு பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் 18 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 7.2 கோடி குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். Trump Account என்பது குழந்தைகள் சிறு வயதிலேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும், எதிர்காலத்திற்கான சேமிப்பை உருவாக்குவதற்கும் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமாகும். கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 7 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

விண்வெளி தரவு மையத் திட்டத்தால் சர்ச்சை!

இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தனது நிறுவனத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியிலும் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். விண்வெளியில் தரவு மையங்களை அமைப்பதற்காக 10 லட்சம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த SpaceX நிறுவனம் முன்வைத்த திட்டத்திற்கு அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (FCC) அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு வானியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவதால் வானியல் ஆராய்ச்சிகளுக்கும், இரவு நேர வானத்தைப் பார்வையிடுவதற்கும் பாதிப்பு ஏற்படலாம் என அமெரிக்க வானியல் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும், AI தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கும் பலன்களைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் வெவ்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில், போட்டி நிறுவனமான Anthropic தனது பங்குகளில் 5 சதவீதத்தை பொதுநல நோக்கங்களுக்கான புதிய நிதியத்திற்கு ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், SpaceX நிறுவனத்தின் பங்கு நன்கொடைகள் நேரடியாக Trump Account திட்டத்துடன் இணைக்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.