குற்றங்களை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடாது சமூக அக்கறையுடன் செயல்பட்டு ஆதரவற்றவர்களுக்கு அன்பு கரம் நீட்டி வருகிறது காவல் கரங்கள் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இதுவரை 4000-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களை தடுத்தல் உட்பட பல்வேறு பணிகளை காவல்துறை மேற்கொள்கிறது. இதனுடன் சேர்த்து சில மனிதநேய பணிகளையும் சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ‘மனிதம் போற்றுவோம்’, ‘மனித நேயம் காப்போம்’ என்பதை அடிப்படையாக வைத்து ‘காவல் கரங்கள்’ என்ற திட்டம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதை 2021 ஏப்ரல் 21-ல் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் கைவிடப்பட்ட நபர்கள், ஆதரவற்ற முதியோர், பெண்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித் திரிபவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், குணமடைந்தவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தல், ஆதரவற்றவர்களை தேவைக்கு தகுந்தாற்போல் பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து பராமரித்தல் ஆகிய பணிகளை காவல் துறையின் ‘காவல் கரங்கள்’ மேற்கொள்கிறது. இது போன்ற சேவைகளுக்காக சென்னை காவல்துறை ஸ்காட்ச் விருது மற்றும் முதலமைச்சரின் சிறந்த பயிற்சிக்கான விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல்துறை இணைந்து ஒருவேளை உணவிற்காக கஷ்டப்படும் வீடில்லா ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் தேடிச் சென்று உணவு வழங்குகிறது.குறிப்பாக இந்த காவல் கரங்களில் 40 சமூக தொண்டு நிறுவனங்களும் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் உள்ளனர்.
இவர்கள் ஹோட்டல் மற்றும் விருந்து உள்ளிட்ட இடங்களில் மீதமுள்ள உணவை சேகரித்து இது போன்று உணவில்லா ஏழைகளுக்கு அளித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையர் லோகநாதன் தலைமையில் இந்த திட்டம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 4000-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு அவர்களின் வீட்டில் சேர்க்கப்பட்டும், வெளி மாவட்டத்தில் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து குடும்பத்திடமிருந்து பிரிந்து சென்று சென்னையில் பிச்சை எடுப்பவர்களை,உணவில்லாமல் தவிப்பவர்கள் 505 பேரை குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளனர். 373 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் காவல் கரங்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் கரங்கள் மூலம் ஆதரவற்ற இல்லங்களிலும், வீடுகளிலும் சட்டவிரோதமாக யாரேனும் அடைக்கப்பட்டு வைத்திருக்கிறார்களா என்று திடீர் சோதனை நடத்தி அவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் உணவில்லாமல்,வீடில்லாமல் தவிக்கும் ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்கும் சேவையையும் காவல் கரங்கள் செய்து வருகின்றன.
இதற்கென்று 9444471710 என்ற மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் பொதுமக்கள் உணவகங்களில் மற்றும் விருந்துகளில் மீதமுள்ள உணவுகளை செல்போன் மூலம் அழைத்து தெரிவிப்பதாகவும், காவல் கரங்களில் உள்ள தன்னார்வலர்கள் அதனை சேகரித்து உணவில்லா மக்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னையில் ஆதரவற்று இருக்கும் இது போன்ற மக்களுக்காக இரண்டு ஆம்புலன்ஸ்களும், இரண்டு எலக்ட்ரிக் வாகனம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்றவர்களை மீட்பதோடு மட்டுமல்லாது சுமார் 1863 உரிமை கோரப்படாத உடல்களை தன்னார்வலருடன் சேர்ந்து எரிக்கவும் மற்றும் புதைக்கவும் காவல் கரங்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
குற்றங்களை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடாது சமூக அக்கறையுடன் ஆதரவற்ற மக்களுக்கு விடாது, சத்தமில்லாமல் ஆதரவற்ற மக்களுக்கு உதவிக்கரங்களை நீட்டும் சென்னை காவல்துறையின் காவல் கரங்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
- பி.ஜேம்ஸ் லிசா











