தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதையடுத்து சூரி விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில் சூரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் பெரிய பொருள் செலவில் தயாராகிறது. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டாடி’ படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இதனிடையே ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு கடலோரப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சவாலான மேக்கிங் காட்சிகளை பகிர்ந்து அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘மண்டாடி’ படத்தில் நடிக்கும் சுஹாஸின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் ‘Saattapuli’ கதாபாத்திரத்தில் மீனவராக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது.




