இ சாலா கப் நம்தே… ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விளம்பரத்திற்காக கொண்டுவரப்பட்ட வார்த்தை இது. ஆனால், அந்த அணியை விமர்சிக்கவே அதிகம் இந்த வார்த்தை பயன்பட்டிருக்கும். ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தற்போது வரை கோப்பைகளை வெல்லாமல் இருந்தாலும், பெரிதளவில் விமர்சிக்கப்படுவது இல்லை. காரணம் ஒட்டுமொத்தமாக நெட்டிசன்களால் அதிகளவில் கலாய்க்கப்படுவது ஆர்சிபி தான்.
ஐபிஎல் தொடர் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு பிறகே, மகளிர் பிரீமியர் லீக் தொடரை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத், லக்னோ ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் விளையாடி வருகின்றன. சென்னை அணி இடம்பெறாமல் போனதாலோ என்னவோ, தமிழ்நாட்டில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தோன்றுகிறது.
கடந்த 4-ம் தேதி தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக் தொடர், வருகிற 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்கிறது. 2 மற்றும் 3-ம் இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில், வெற்றிபெறும் அணி முதலிடத்தில் இருக்கும் அணியுடன் இறுதிப்போட்டியில் மல்லுக்கட்ட உள்ளது.
இதையும் படியுங்கள் : அரசியலுக்கு வராதது ஏன்? – மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்
ஐபிஎல்-இல் விராட் கோலி, ஏபி.டிவில்லியர்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களை கொண்டிருந்த பெங்களூரு அணி, பேட்டிங்கில் அசத்தினாலும் பந்துவீச்சில் கோட்டைவிடும் வகையில் விளையாடி வருகிறது. அதுபோன்ற தவறைத்தான் மகளிர் பிரீமியர் லீக்கில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும் செய்கிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஸ்மிருதி மந்தனாவை அதிக தொகைக்கு(ரூ.3.40 கோடி) பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்ததும், அந்த அணிக்கான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியது. ஐபிஎல் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல், ஸ்மிருதி மந்தானா பெங்களூரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதும், அந்த அணியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், அந்த மகிழ்ச்சி சிறுதுகாலம் கூட நீடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல், மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி மந்தமாக இருப்பதே அதற்கு காரணம். அனைத்து அணிகளுடனும் தலா ஒரு முறை மோதி தோல்வியையே பரிசாக பெற்றுள்ளது பெங்களூரு அணி.
குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்த அணி சந்தித்த மோசமான தோல்வி, சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. ஸ்மிருதி தலைமையிலான பெங்களூரு அணியை ஒப்பிட்டு பார்த்தால், ஐபிஎல் தொடரில் விளையாடும் பெங்களூரு அணி எவ்வளவோ பரவாயில்லை என்று விமர்சிக்கப்படும் அளவிற்கு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில், ஐபிஎல்-இல் அதிக கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ள ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம், ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான மகளிர் பிரீமியர் லீக்கிலும் தொடர்கிறது. நடப்பு தொடரில் தோல்வியையே சந்திக்காததுதான் அதற்கு சான்று.
மகளிர் பிரிமீயர் லீக் ஏறக்குறைய முதல் பாதியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழலில் பெங்களூரு அணி உள்ளது. கிரிக்கெட்டை பொறுத்தவரை என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறினால், இப்போது விமர்சிக்கப்படும் அதே வாயால் நிச்சயம் பாராட்டுகளை பெறும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.
– தென்றல் பிரபாகரன், நியூஸ் 7 தமிழ்







