சீமான் குறித்து அவதூறாக பேசியதாக யூ டியுப்பர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு!

நாம் தமிழர் கட்சி சீமான் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக யூ டூயுப்பர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “யூ டியூபரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி, தனியார் யூடியூப் சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்டியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் ஸ்டாலினிடம் ரூ.100 கோடி பெற்றதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழன் கோகுல் தனது முகநூல் பக்கத்தில் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு, சீமான் மீது தனிநபர் தாக்குதலை செய்கிறார்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சீமான் மீது அவதூறு பரப்பிய பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி நேற்று விசாரித்தார். பின்னர் நீதிபதி, தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். சீமான் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர். முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக திமுக எம்எல்ஏவை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். ஆனால், சீமானை அவதூறாகப் பேசியவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

மனுதாரர் தரப்பில், பழநி கோயில் நிலப் பதிவு தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் குறித்து வீடியோ வெளியிட்டநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். சீமானை அவதூறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி, அவதூறு வழக்குகளில் பாரபட்சமான நடவடிக்கையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. மதுரை சைபர் கிரைம் போலீஸார், சீமான் தொடர்பான மார்ஃபிங் புகைப்படங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். யூ டூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். அதில், யூ டூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உயர் நீதிமன்ற உத்தரவு படி 5 பிரிவுகளில் BNS 192, 296B, 352,353(1)மற்றும் தகவல் தொழிநுட்ப பிரிவு 67 படி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.