பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!

டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெற்ற பெல்லட் துப்பாக்கி சூட்டிற்கு உள்துறை அமைச்சர் தான் உத்தரவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்கள் பல மாதங்கள் படித்து தேர்வுக்கு தயாராகிறார்கள். ஆனால் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு விடுகிறது.

பெரும் பெரும் பணக்காரர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி இந்த வினாத்தாள்களை குறுக்கு வழியில் வாங்கி தேர்ச்சி பெற்று வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் நடுத்தர குடும்பத்தினரும் ஏழை மாணவர்களும் பெரும் சிரமங்களை சந்திக்கிறார்கள். நாட்டில் அனைத்தும் தனியார் மையப்படுத்தப்பட்டு விட்டது. தேர்வுகள் என்று மீண்டும் மீண்டும் மாணவர்கள் தொடர் அழுத்தங்களுக்கான உள்ளாகிறார்கள்.

நமது கல்வி முறை என்பது மாணவர்களை உறிஞ்சி எடுக்கும் வகையில் இருக்கிறது. நமது கல்வி அமைப்பு இவ்வளவு மோசமான நிலைமைக்கு போனதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான்.

தர்மேந்திர பிரதான் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் கல்வித்துறை அமைச்சகத்தை அவர் நிர்வகிக்கவில்லை. உண்மையில் நிர்வகிப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான்.

உண்மையில் இந்த விவாதத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு தைரியம் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கே..? ஏனென்றால் அவர் பயந்துவிட்டார்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “இன்றைய விவாதம் கல்வித்துறை சார்ந்தது உள்துறையை அமைச்சகம் சார்ந்தது அல்ல. எனவே அந்தப் பெயரை எதற்காக எடுக்கிறீர்கள்..?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் மத்திய உள்துறை அமைச்சர் தான். எனவே அவர் இந்த அவையில் இருக்க வேண்டாமா..?” என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “மத்திய உள்துறை அமைச்சர் அமிச்சா தான் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் என ராகுல் காந்தி எப்படி சொல்ல முடியும். அவைக்கு வெளியே நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இந்த அவைக்குள் நீங்கள் இப்படி பேச ஆதாரங்கள் வேண்டும் இல்லையென்றால் நீங்கள் அவை மாண்பை மீறியவர்களாக அறியப்படுவீர்கள் இப்படி பேசுவது விதிமுறை அல்ல. மத்திய உள்துறை அமைச்சர் பெயரை பயன்படுத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஆனால் ராகுல் காந்தி, “துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவு உள்துறை அமைச்சர் மூலமாக தான் பிறப்பிக்க முடியும். எனவே நான் பேசியதில் இருந்து பின்வாங்க போவதில்லை” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.