கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடி நிதி உதவி அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பரவல் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன் படுத்தப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து தொழில் நிறுவனங்கள் நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா தடுப்புப் பணிக்காக வழங்கினர்.







