சென்னை தீவுத்திடலில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற, சிங்கார சென்னை உணவு திருவிழா2023 -ல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிங்கார சென்னை உணவு திருவிழா- 2023 நடைபெற்றது. இதில் பல வகையான உணவு வகைகள் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பாரம்பரிய சிறுதானிய அரங்குகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சைவ, அசைவ உணவு வகைகள், தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
காலை 10 முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற உணவுத்திருவிழாவில், வெளியில் ஒவ்வொரு இடத்தில் கிடைக்க கூடிய உணவு வகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உணவு திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.
பிரியாணி முதல் ஐஸ் வரை விற்கப்பட்ட இத்திருவிழாவில், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பங்கேற்றனர். மேலும் இத்திருவிழாவில் விடுமுறை தினத்தை முன்னிட்டு இசைகச்சேரி வைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தன்னையே மறந்து இசை மழையில் நனைந்தனர்.
ரூபி.காமராஜ்







