விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மெல்லிய சாரல் மழை துளிகளுடன் ரம்யமான சூழலில் ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கடந்த 5 தினங்களாகப் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சீராக தண்ணீர் கொட்டி வருகிறது. குறிப்பாக, மழைக்கால சீசனானது கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்ற நிலையில், மழைக்கால சீசன் காலங்களில் மழையானது சரிவர பெய்யாமல் இந்த வருட சீசனானது களையிழந்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது மழைக்கால சீசன் முடிந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் குற்றாலம் பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததன் காரணமாக, குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்கள் உள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின், அருவி ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் காலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக குற்றாலம் பகுதியில் இதமான சூழல் நிலவி வரும் சூழலில் ஏராளமான ஆண்களும் பெண்களும் தற்போது அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






