கொச்சியில் உள்ள பார் ஹோட்டலில் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில் கைத்துப்பாக்கியால் ஹோட்டலுக்குள் சுட்டுவிட்டு சென்ற வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கொச்சி குண்டனூரில் உள்ள ஓஜிஸ் காந்தாரி பார் ஓட்டலுக்கு இரண்டு பேர் குடிக்க வந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக குடித்த நிலையில் இருவரும் முழு போதையில் ஹோட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் மதியம் மூன்றரை மணி வரை குடித்துவிட்டு பாரில் இருந்து வெளியே வந்தனர். 
அப்போது ஒரு நபர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஒருவேளை தங்களை சுடத்தான் அந்த நபர் துப்பாக்கியை எடுத்துள்ளார் என நினைத்து பதுங்கி கொண்டனர். அந்த நபரோ பாரின் சுவரில் துப்பாக்கியால் இருமுறை சுட்டுள்ளனர்.
பின்னர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பார் உரிமையாளர் இந்த துப்பாக்கி சூடு குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். இதில் துப்பாக்கி தோட்டாக்கள் எதும் கிடைக்கவில்லை, சுவரில் ஈயம் பதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகி இருந்தது. 
இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் துப்பாக்கியால் சுட்டவர் கொல்லத்தை சேர்ந்த சோஜன் என்பதும் அவருடன் இருந்தவர் வழக்கறிஞர் ஹரோல்ட் என்பதும் தெரிய வந்தது. வழக்கு ஒன்றில் சிக்கிய சோஜனை வக்கீல் ஹரோல்ட் ஜெமினி எடுத்ததை கொண்டாட இருவரும் மது குடித்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இருவரும் ஹோட்டல் பாரில் குடித்து விட்டு புறப்படும்போது உற்சாகத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஹோட்டல் பார் சுவரில் சுட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் எர்ணாகுளம் ஆலாப்புழா மாவட்ட எல்லையில் இருந்தபோது கைது செய்து மரடு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீனில் வந்ததை கொண்டாட ஹோட்டலுக்கு வந்தவர்கள் தற்போது மீண்டும் சிறைக்கு செல்லவேண்டியதாகிவிட்டது.







