கந்தசஷ்டி விழா:திருச்செந்தூரில் குவிந்த வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள்

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் குவிந்துள்ளனர்.   முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா…

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் குவிந்துள்ளனர்.

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விழா நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கலந்து கொண்டுள்ளனர்.

 

முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்ற முன்னோர்களின் கூற்றுக்கு ஏற்ப குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும், தொழில் வளம், திருமணம் உள்ளிட்ட பல்வேறு வரம் வேண்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டியில் விரதம் இருக்க தொடங்கியுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும், லண்டன், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலிலேயே 6 நாட்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

கந்தசஷ்டியில் விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவேளை பச்சரிசி சாதம், பால், பழம் உண்டு விரதம் இருப்பது வழக்கம். சிலர் விரதம் இருக்கும் ஆறுநாட்களும் தண்ணீர் அருந்தியும், ஒரு சிலர் மவுன விரதமும் இருக்கின்றனர். இவ்வாறு தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப விரதம் இருக்கும் பக்தர்கள், அதிகாலையில் கடலில் புனித நீராடி, அங்க பிரதசட்னம், அடி பிரதட்சனம் செய்தும் மடிப்பிச்சை ஏந்தியும் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கந்த சஷ்டி கவசங்களை பாடியும், ஓம் சரவணபவ எழுதி விரதம் இருப்பது பார்ப்பவர்களுக்கு பக்தி பரவசத்தை அதிகப்படுத்துகிறது.

திருக்கோயிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்படம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக 8 ஆயிரம் பேர் தங்கும் வகையில் தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் விரதம் தொடங்கிய நாள் முதல் நிறைவு செய்யும் நாள் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் உறுதியளித்துள்ளது.

-எம்.சுடலைகுமார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.