கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் புகார் வந்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர் . அப்போது, பூமார்க்கெட் பகுதியில் மூன்று சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் முதியவர் ஒருவரிடம் பணம் மற்றும் செல்போனை திருடுவதை போலீஸார் பார்த்துள்ளனர். இதையடுத்து, அவர்களது அருகில் சென்ற போலீஸார் 7 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் மகடோ (36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23), பீகாரைச் சேர்ந்த மனிஷ்மகோலி (22), பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், ஜார்கண்ட்டைச் சேர்ந்த 14, 10 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இந்த 7 பேரும் விமானம் மூலம் கோவை வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். காந்திபுரம், டவுன் ஹால், உக்கடம், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததுள்ளனர். பின்னர், கோவையில் இருந்து விமானம், ரயில் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பணம் முழுவதும் செலவான பிறகு மீண்டும் சொந்த ஊரிலிருந்து கோவைக்குத் திரும்பி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-ம.பவித்ரா







