5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த…

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வழூர் கிராமத்தைச் சோ்ந்தவர் விவசாயி சக்கரபாணி. அதிமுக பிரமுகரான இவர் அதே கிராமத்தில் உள்ள செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைப் பகுதிக்கு உள்பட்ட தனது விளை நிலத்தில் சுமார் 5 ஏக்கர்களில் கரும்பு பயிரிட்டிருந்தார். மேலும், ஆலை கரும்பு வெட்டும் இயந்திரம் மூலம் கரும்பை வெட்டும் வகையில் அவர் இடைவெளி விட்டு பயிரிட்டிருந்தார்.

ஆனால், இயந்திர பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால், செஞ்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பை வெட்டி எடுத்துச் செல்லும்படி ஆலை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், சில தினங்களுக்கு முன்பு கரும்பு வெட்டுக் கூலியாள்களை வைத்து முதல் கட்டமாக 13 டன் கரும்பை வெட்டி செஞ்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சக்கரபாணி அனுப்பிவைத்தார்.

ஆனால், கரும்புக்காக ஆலையிலிருந்து பெறப்பட்ட தொகையை விட வெட்டுக் கூலிக்கு செலவு அதிகமானதால் அவர் மிகவும் வேதனையடைந்துள்ளார். எனவே டிராக்டரை வைத்து 5 ஏக்கரில் இருந்த கரும்பு பயிர்கள் முழுவதையும் அவர் அழித்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி சக்கரபாணி கூறியதாவது, ”கூலி ஆள்களை வைத்து 13 டன் கரும்பை வெட்டி, செஞ்சி சர்க்கரை ஆலைக்கு அனுப்ப ரூ.48 ஆயிரத்து 800 செலவழித்தேன். ஆனால், ஆலையிலிருந்து எனக்கு வந்ததோ ரூ.39 ஆயிரம் மட்டுமே. மீதமுள்ள கரும்பையும் வெட்டி அனுப்பினால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, டிராக்டரை வைத்து மீதமுள்ள கரும்பு பயிர்களை நிலத்திலேயே உழுது அழித்து விட்டேன். விவசாயிகளின் வேதனையை இனியாவது புரிந்து கொண்டு ஆலை சீரான முறையில் இயங்க செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.