திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவு..!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவடைந்துள்ளது. 2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும்,…

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், ஐந்தாவது நாளாக நேற்று பல இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், forensic audit எனப்படும் தொழில்நுட்ப தடயவியல் ஆய்வை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து வருமான வரித் துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளார். ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதோடு, ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் தற்போது, 4.5 கோடி ரூபாய் பணம் மற்றும் 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

ஜெகத்ரட்சகன் நடத்தி வரும் அறக்கட்டளையை மையமாக வைத்தே இந்த வருமானவரித் துறை சோதனை நடப்பதாக தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது அறக்கட்டளைக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பெயர்களில் அறக்கட்டளையை பதிவு செய்து வந்ததால் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை அறக்கட்டளை பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இதே போன்று சவிதா கல்வி குழுமம் தொடர்பான இடங்களிலும் தனித்தனியாக இரண்டு குழுமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சவிதா குழுமத்திற்கும், ஜெகத்ரட்சகன் சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைகளுக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. அதோடு, சவிதா கல்வி குழுமம் தொடர்பான சோதனையில் 27 கோடி ரூபாய் பணம் மற்றும் 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

60க்கும் மேற்பட்ட இடங்களில் ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ரூ. 4.5 கோடி ரொக்க பணம் 2.7 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே சோதனையின் போது ஜெகத்ரட்சகன் அவருடைய மகன், மகள், மருமகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள், விரைவில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ரொக்க பணம் நகைகள் முக்கிய ஆவணங்களை பெரிய பெட்டியில் வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று உள்ளனர். சவிதா கல்வி குழுமங்களிலும் நடந்து வந்த வருமானவரித்துறை சோதனையும் நிறைவடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.