”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு JNU உத்தரவு!

”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு ஜெ.என்.யூ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்து வருபவர் சென்னையைச் சார்ந்த நாசர் முகமது மொகைதீன்.  இவரது முனைவர்…

”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு ஜெ.என்.யூ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்து வருபவர் சென்னையைச் சார்ந்த நாசர் முகமது மொகைதீன்.  இவரது முனைவர் படிப்பை நிறுத்திக் கொள்ளுமாறு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத சூழலில்,  முனைவர் பட்டத்திற்கான தனது மேற்பார்வையாளரை மாற்றிக் கொள்ள வேண்டும் எனில் அதற்கான நியாயமான காரணங்களை  பல்கலைகழக தலைவரின் முன்னிலையில் பேசி, அவர் ஒப்புதலுடன்  மாற்றிக் கொள்ளலாம் என்பது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் ஒரு விதியாகும்.

இந்நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவரான நாஸர் முகமது மொகைதீன் தன் மேற்பார்வையாளரான ஷைலஜா சிங் மீது, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் “சிங் தலைமையில் என்னால் எனது பட்டப்படிப்பை தொடர முடியாது. எனது ஆராய்ச்சிக்கு அவரால் உதவமுடியவில்லை” என ஜே.என்.யு பல்கலைகழக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 3 பேர் கொண்ட குழுவை அமைத்து பல்கலைகழகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டது.  இந்த விசாரணையின் போது, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் தீர விசாரித்தப் பின், ஷைலஜா சிங்கை மாற்ற வாய்ப்பில்லை என தெரிவித்தது.

மேலும் மாணவர் நாஸருக்கு வேறு மேற்பார்வையாளர் வழங்க முடியாது என்றும் அந்தக் குழு தெரிவித்தது. மேலும்,  மாணவர் நாஸருக்கு பல்கலைக்கழகம் சார்பில் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், நாஸர் பட்டப்படிப்பை தொடர வேண்டாம் எனவும் அவருக்கு சேர வேண்டிய சம்பளம் குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் நாஸர் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி மற்றும் ஜெ.என்.யூ பல்கலைகழகத்தில் தந்தை பெரியார் படம் சேதப்படுத்தப்பட்டதை தட்டிக் கேட்டதால் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பால் தாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.