கடலில் பேனா சிலை அமைக்க சீமான் எதிர்ப்பு; கருத்துக் கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

சென்னை மெரினா கடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்  அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதியை கௌரவப்படுத்தும் விதமாக, …

சென்னை மெரினா கடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்  அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதியை கௌரவப்படுத்தும் விதமாக,  மெரினா கடற்கறையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் அருகே கடலினுள் 134 அடி உயர பேனா சிலையை  அமைக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்து மத்திய அரசின் சுற்றுசூழல் துறையின் ஒப்புதலை  கேட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரை  அடக்கம் செய்யும் போது அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில்  2.21 ஏக்கர் பரப்பில் நினைவிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையின் சார்பாக இன்று பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் , சென்னை  கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக்  கருத்து கேட்பு  கூட்டத்தில் இருந்த சிலர் கூச்சலிட்டதால் அவர்களுக்கும் திமுக ஆதரவாளர்களுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் பேசியதாவது..

“கடலில் பேனாவை வைப்பதாக இருந்தால் வெறுமனே அப்படியே நிறுவ முடியாது. கல் , மணல் போன்ற கலவைகளை கொட்ட வேண்டும். அதனால் கடல்வளம், பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப்பற்றி அக்கறை உள்ளது. கடலில் அடக்கம் செய்யவிட்டதே தவறு. இதில் பேனா வைக்க எப்படி வைக்க அனுமதிக்க முடியும். பள்ளிக் கூடம் கட்ட காசு இல்லை. ஆனால் பேனா வைக்க எங்கிருந்து காசு வந்தது. நீங்கள் பேனாவை வைத்துப் பாருங்கள் நானே வந்து உடைப்பேன். கடலில் பேனா வைத்தால் 13 மீனவ பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது” எனப் பேசினார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.